Total Pageviews

Saturday, December 10, 2011

1970 களில் ரஜினிகாந்த்


















"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்"





1970 கள் - தமிழ் சினிமாவின் நிறம் மீண்டுமொருதடவை மாற ஆரம்பித்த காலப்பகுதி இது; 1950 களுக்கு முன்னால் பாடல்களால் கதை சொன்ன தமிழ் சினிமாவை அண்ணாத்துரை, கருணாநிதி போன்ற திராவிட எழுத்தாளர்கள் வசனத்தால் கதை சொல்லும் ஊடகமாக மாற்றி அமைத்தார்கள். 1950 களில் வசனகர்த்தாக்களுக்கு முன்னுரிமை அதிகம் இருந்திருந்தாலும் 1960 களில் தமிழ் சினிமா கதாநாயகர்களது கைகளுக்கு தாவியது; சிவாஜி கணேஷன், எம்.ஜி.ராமச்சந்திரன் போன்ற மாபெரும் நடிகர்கள் தங்கள் ஆளுமையை மக்களிடம் வியாபித்திருந்தனர். நடிகர்களுக்காகவே படம் பார்க்கும் காலமாக மாறிய 1960 களை உடைத்து இயக்குனர்கள் தங்களது ஆதிக்கத்தை தமிழ் சினிமாவில் படரவிட ஆரம்பித்த காலப்பகுதிதான் 1970 கள். 

ஒரு இயக்குனராக நடிகர்களின் இமேஜை உடைத்த முதல் இயக்குனர் ஸ்ரீதர் என்றாலும் அவரால் ஒரு 'காதலிக்க நேரமில்லை' மட்டும்தான் 1960 களில் வெற்றிகரமாக கொடுக்க முடிந்தது. ஆனால்1970 களில் பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்கியராஜ், மகேந்திரன், பாலுமஹேந்திரா என பெரும் இயக்குனர் கூட்டமே தமிழ் சினிமாவை தம்வசப் படுத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில் 1970 களின் நடுப்பகுதியில் தமிழ் சினிவாவிற்கு இயக்குனர் சிகரத்தால் கைப்பிடித்து அழைத்து வரப்பட்டவர்தான் இன்று இந்திய சினிமாவே உச்சத்தில் வைத்து கொண்டாடும் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் எனப்படும் சிவாஜிராவ் கெய்க்வாட். சமகாலத்தில் இயக்குனர் பஞ்சு அருணாச்சலத்தால் தமிழ் சினிமாவுக்கு அழைத்துவரப்பட்ட மற்றுமொரு மாபெரும் சக்தி - இசைஞானி இளையராஜா. 

"கண்ணா லட்டு திங்க ஆசையா?" "கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?" யாருக்குத்தான் ரெண்டு லட்டு திங்க ஆசை இருக்காது!!!! பழையசாதம் போட்டாகூட பராவாயில்லை என்னும் நிலையில் இருந்த சிவாஜிராவ் என்னும் இளைஞனை பார்த்து இயக்குனர் பாலச்சந்தர் "கண்ணா உனக்கு மூணு லட்டு திங்க ஆசையா?" என்று கேட்கிறார்!!! தலைகால் புரியாத சிவாஜிராவிற்கு தன் 'மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தின் சந்திரகாந்தின் பிள்ளைகளில் ஒருவரான ரஜினிகாந்த் என்னும் பெயரை சூட்டுகிறார்; மற்றைய பிள்ளையின் 'ஸ்ரீகாந்' என்னும் பெயர் இன்னுமொரு நடிகருக்கு ஏற்க்கனவே சூட்டியாகி விட்டதால் மீதமிருந்த பெயர்தான் 'ரஜினிகாந்த்'. 



ஆரம்பங்களில் நடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்ட ரஜினிகாந்திற்கு நடிகர் நாகேஷ் நிறைய டிப்ஸ் கொடுத்திருக்கிறார். பாலச்சந்தரின் ஆஸ்தான நடிகரான நாகேஷின் ஆதரவும் அரவணைப்பும் ரஜினிகாந்திற்கு முதல்ப் படத்திற்கு மிகவும் உதவியாக அமைந்திருந்தது. என்னதான் தான் சிறப்பாக நடிக்கவேண்டும் என நினைத்தாலும் சில நேரங்களில் சொதப்பிய ரஜினிகாந்த் பாலச்சந்தரால் திட்டப்பட்டு ஸ்டூடியோவிற்கு வெளியேயும் அனுப்பப்படுள்ளார்; அப்போதெல்லாம் அவருக்கு பக்கதுணை ஒரு சிகரட் மட்டும்தான். ஒரு சிகரட்டை பற்றவைத்து பிரெஷ் ஆகி மீண்டும் குறிப்பிட்ட காட்சிகளை கச்சிதமாக நடித்துக் கொடுத்திருப்பார் ரஜினிகாந்த். 

அபூர்வராகங்கள், மூன்று முடிச்சு, அந்துலேனி காதா (தெலுங்கு) இவை மூன்றும்தான் பாலச்சந்தர் ரஜினிக்கு கொடுத்த மூன்று லட்டுக்கள். இவற்றுக்கு இடையில் 'கதா சங்கமா' என்னும் தெலுங்குப் படத்திலும் ரஜினி நடித்திருப்பார். அபூர்வராகங்களில் பெரிதாக வேடமில்லை என்றாலும் யார் இந்த முரட்டு இளைஞன் என்று பலராலும் திரும்பிப் பார்க்கப்பட்டார்; அறிமுகக்காட்சியில் ரஜினியின் விம்பத்திற்கு முன்னால் எழுதப்பட்ட வாசகம் 'சுருதி பேதம்'. பின்னொருநாளில் முதல்க் காட்சியிலேயே அவ்வாறு எழுதப்பட்டது வருத்தமாக இல்லையா என கேட்டதற்கு ரஜினி "பாலச்சந்தர் எடுத்த முதல்ப் படம் 'நீர்க் குமிழி' அவர் என்ன நீர்குமிழி போல காணாமலா போய்விடார்?" என பதிலளித்திருந்தார். அடுத்து மூன்று முடிச்சு, அவர்கள் என பாலச்சந்தர் படங்களில் தன் குணச்சித்திர நடிப்பால் தமிழ் ரசிகர்களை கொள்ளையிட ஆரபித்த ரஜினிகாந்த் பாலச்சந்தரை விட்டு வெளியில் வந்து நடித்த முதல் திரைப்படம் கவிக்குயில். 

குனச்சித்திரவேடம், வில்லன் வேடம் என நடித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த்தை முதல் முதலாக கதாநாயகனாக்கிய திரைப்படம் 'புவனா ஒரு கேள்விக்குறி'. அதுவரை நேர்மறையான பாத்திரங்களில் மட்டும் நடித்துவந்த சிவகுமாரை வில்லானாக்கி ரஜினிகாந்தை கதானாயனாக்கி எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 'புவனா ஒரு கேள்விக்குறி' இன்றுவரை ரஜினியின் மிகச்சிறந்த நடிப்பாற்றல் உள்ள திரைப்படங்கள் வரிசையில் முக்கியமானது; 'ராஜா என்பார் மந்திரி' என்பார் பாடலில் ரஜினியின் பெர்போமான்ஸ் இப்போது பார்த்தாலும் பிரமிப்பாக இருக்கும். இதுவரை ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் அதிகம் வசூலித்த திரைப்படம் 'புவனா ஒரு கேள்விக்குறிதான்'. அன்று ஆரம்பித்த எஸ்.பி.முத்துராமன் நட்பு ரஜினியின் 25 படங்களை எஸ்.பி.எம் இயக்கிய பின்னரும் இன்றுவரை தொடர்கின்றது. 



'பரட்டை' தமிழ் சினிமா மறக்க முடியாத கேரக்டர்களில் ஒன்று; பாரதிராஜா என்னும் இமயத்தின் அறிமுகத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் கிடைத்த மாபெரும் கலைப்படைப்பு '16 வயதினிலே'; தமிழ் சினிமாவின் பாணியையே மாற்றிப் போட்ட படைப்பு இது. ஸ்ரூடியோக்களில் சுற்றித்திரிந்த கேமராவை கிராமங்களுக்குள் கொண்டு சென்று புதுமை புரிந்த பாரதிராஜா வசன உச்சரிப்பிலும் மிகப்பெரும் மாறுதலை உருவாக்கினார்; நாடக பாணியில் இருந்து வழுக்கி வசனங்களை யதார்த்தத்திற்கு மாற்றிய திரைப்படமிது. 'பரட்டை' 'சப்பாணி' கேரக்டர்கள் ரஜினி, கமலுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவிற்கும் மறக்க முடியாதவை. ரஜினிகாந்த் & கமல்ஹாசனின் முதல் வெள்ளிவிழா திரைப்படமும் இதுதான் (240 நாட்கள்). 

தொடர்ச்சியாக தமிழ், கன்னடம், தெலுங்கு என பல படங்களில் நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துவந்த ரஜினிக்கு 'சூப்பர் ஸ்டார்' டைட்டிலை படத்தின் போஸ்டர்களிலும், பானர்களிலும் பொறித்து 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஆக்கியவர் இன்றைய முன்னணி தயாரிப்பாளரும், அன்றைய முன்னணி விநியோகிஸ்தருமான கலைப்புலி எஸ்.தானு அவர்கள்தான். அதற்க்கு காரணம் இல்லாமல் இல்லை! 1975 களின் பின்னர் எம்.ஜி.ஆர், சிவாஜியின் தாக்கம் கிட்டத்தட்ட இல்லாமல் போயிருந்த காலகட்டத்தில் அடுத்த தலைமுறை நாயகர்கள் என்று அன்று ஆரூடம் கூறப்பட்ட ஜெயஷங்கர், ரவிச்சந்திரன், விஜயகுமார், சிவகுமார் போன்றோரால் தமிழ் சினிமாவை வணிகரீதியாக ஓரடிகூட முன்னால் கொண்டுசெல்ல முடியவில்லை. 

அந்தக்காலப்பகுதியில் ரஜினி நடித்த படங்களின் வசூல் சொல்லிக்கொள்ளும் படியாகவும், வணிகரீதியாக விநியோகிச்தர்களுக்கு லாபம் தரும் அளவிற்கு கிடைத்ததால் ரஜினி நடிக்கும் படங்களை விநியோகிஸ்தர்கள் தேடித்தேடி வாங்க ஆரம்பித்திருந்தார்கள். இந்நிலையில்த்தான் எஸ்.தானுவால் 'பைரவி' திரைப்படத்தின் விளம்பரங்களில் 'சூப்பர் ஸ்டார்' என விளம்பரப் படுத்தப்பட்டிருந்தது. ஆனாலும் அக்காலப்பகுதிகளில் எந்த ரஜினி பட டைட்டிலிலும் 'சூப்பர் ஸ்டார்' பட்டம் அடைமொழியாக சேர்த்துக் கொள்ளப்படவில்லை. 



பைரவியை தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ரஜினி, கமலின் மற்றுமொரு சிறந்த படைப்பான 'இளமை ஊஞ்சல் ஆடுகிறது' வெளியாகியது; கமலுக்கு ரஜினியைவிட அதிக முக்கியத்துவம் இருக்கும் (ஸ்கோப்) கேரக்டர்களே வழங்கப்பட்டுவந்த காலத்தில், கமலுக்கு நிகரான வேடத்தை ஸ்ரீதர் அவர்கள் ரஜினிக்கும் கொடுத்திருப்பார். ரஜினியின் மிகச்சிறந்த பெர்போமான்ஸ் திரைப்படங்களில் இதுவும் ஒன்று.1978 ஆனி மாதம் 'பைரவி' திரைப்படத்திற்கு 'சூப்பர் ஸ்டார்' டைட்டில் இட்ட நேரம் அடுத்தடுத்து ரஜினி படங்கள் வசூலில் சக்கை போடு போட ஆரம்பித்தன. 

இளமை ஊஞ்சல் ஆடுகின்றதை தொடர்ந்து 1978 ஆவணி மாதம் 15 ஆ திகதி இந்திய சுதந்திரதின நன்னாளில் வெளிவந்த திரைப்படதான் மகேந்திரனின் 'முள்ளும் மலரும்'. கதாசிரியராக இருந்த மகேந்திரனை தனக்காக ஒரு படம் இயக்கித்தர வேண்டும் என்று வேணு செட்டியார் கேட்டுக்கொண்டதற்க் கிணங்க மகேந்திரன் எழுதிய திரைக்கதைதான் 'முள்ளும் மலரும்'. திரைக்கதையுடன் செட்டியாரை சந்தித்த மகேந்திரன் தன் கதைக்கு ரஜினிகாந்தான் நாயகன் என்றதும் செட்டியார் முடியவே முடியாது என மறுத்துவிட்டார், ரஜினி இல்லாவிட்டால் 'முள்ளும் மலரும்' இயக்கமாட்டேன் என்று மகேந்திரன் கூறிவிட்டார்; நீண்ட சமரசத்திற்கு பின்னர் செட்டியார் ஒருவாறு ஒத்துக்கொண்டார். 

ஆனாலும் அவருக்கு பெரிதாக ஈடுபாடில்லை, படம் முடியும் தருவாயில் படத்தினை பார்த்த செட்டியார் படத்தின் குறைவான வசனங்களை சுட்டிக்காட்டி இந்த படம் ஒன்றுக்கும் உதவாது என்று கூறிவிட்டார். மேலதிக செலவிற்கும், விளம்பரத்திற்கும் பணம் கொடுக்கவும் மறுத்துவிட்டார். இந்த நேரத்தில் கமல்ஹாசன் மற்றும் ஒரு சில திரையுல நண்பர்கள் உதவியுடன் மகேந்திரன் முள்ளும் மலரும் திரைப்படத்தை வெளியிட்டார். விளம்பரமின்மையால் முதல்வாரம் படம் மிகவும் மந்தமாகவே ஓடியது; அடுத்தடுத்த வாரங்களில் Word Of Mouth மூலம் திரைப்படம் பற்றிய நேர்மறையான கருத்துக்கள் மக்களை சென்றடைய படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது. ரஜினியின் திரை வாழ்க்கையில் மிக மிக முக்கியமான திரைப்படமாகவும், தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த திரைப்படமாக இன்றளவும் பேசப்படுகின்றது; என்றும் பேசப்படும். 



முள்ளும் மலருமை தொடர்ந்து 1978 மார்கழி மாதத்தில் ரஜினிகாந்த் நடித்த மற்றுமொரு மாபெரும் வெற்றித் திரைப்படம் வெளியாகியது. சுஜாதாவின் கதைக்கு எஸ்.பி முத்துராமன் திரைவடிவம் கொடுக்க முழுக்க மழுக்க சிங்கப்பூரில் உருவான முதல் திரைப்படமான 'பிரியா' பாடல்களாலும், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் ரஜினிகாந்தின் துருதுரு நடிப்பாலும் வெள்ளிவிழாக் கண்டது. அடுத்து 1979 களில் தர்ம யுத்தம், நான் வாழவைப்பேன், அன்னை ஓர் ஆலயம், நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனும் அற்ப்புத விளக்கும், ஆறிலிருந்து அறுபதுவரை என ரஜினியின் வெற்றிகள் தொடர்ந்தன. 

'ஆறிலிருந்து அறுபதுவரை' திரைப்படத்தின் வெற்றி ரஜினியின் திரைப்பயணத்தில் கிடைத்த மிக முக்கியமான வெற்றியாக கணிக்கப்பட்டது. காரணம் தனது பாணியில் இருந்து (துருதுரு) விலகி, முழுமையாக உடல் மொழியை மாற்றி 'சந்தானம்' கேரக்டராகவே ரஜினி வாழ்ந்திருப்பார். எஸ்.பி.எம் இந்த படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என தானும் ரஜினியும் பயந்ததாகவும்; முதல்வாரம் எப்படியும் கூட்டம் வரும், இரண்டாம் வாரம் திங்கட்கிழமை காட்சியை பார்த்தால் முடிவு தெரிந்துவிடும் என்பதால் பொறுத்திருந்து திங்கள் மக்கள் கொடுத்த அதீத வரவேற்பில் மகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

1975 களில் சினிமா கல்லூரி படிப்பை முடித்துவிட்டு உணவுக்கே பண நெருக்கடியான சூழலில் நண்பனின் அறையில் ஏதாவதொரு கம்பனி தன்னை கூப்பிடாதா? அதிலும் தான் சந்தித்து பேசும்போது தனக்கு "உன்னை ஞாபகம் வைத்திருக்கிறேன்" என்று கூறிய கே.பி கூப்பிட மாட்டாரா என தினம் தினம் வாசலைப் பார்த்துக் கொண்டிருந்த சிவாஜிராவ் என்னும் கரிய வரண்ட தோல், குட்டிக் கண், பரட்டை தலை, ஆறடி உயரம் கொண்ட இளைஞன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் நாட்டின் மிகப்பெரும் நட்ச்சத்திரம்; அதிலும் உச்ச நட்சத்திரம், நினைத்துக் கூட பார்க்கமுடியாத அபரிமிதமான வளர்ச்சி....... 



இந்த இடத்தை அடைய சிவாஜிராவ் என்னும் அந்த இளைஞன் பட்டபாடு கொஞ்ச நெஞ்சமில்லை. சினிமாக் கனவுடன் சினிமா கல்லூரிக்காக நண்பனின் பணத்தில் சென்னைக்கு வந்தவன் வீதியோரங்களில் தூங்கியிருக்கிறான், உணவகங்களின் சமையல் அறைகளில் அடுப்பு வெக்கையில் தூங்கியிருக்கிறான், கட்டணம் கட்ட பணமில்லாமல் கூலிவேலை செய்திருக்கிறான், சக மாணவர்களால் ஏழ்மையின் நிமித்தம் ஏளனமும் செய்யப்பட்டிருக்கிறான்; எத்தனை அவமானங்களைத்தான் அவன் கல்லூரிக் காலங்களில் சந்தித்திருப்பான்!!! அத்தனைக்கும் அன்று அவனுக்கு உறுதுணையாய் நின்றவர்கள் அவன் நண்பர்கள், இன்றைக்கும் அவர்கள் அவனுக்கு நண்பர்கள்தான்!!!!!! அதுதான் இன்றைக்கும் அவன் உயரத்தின் ரகசியம்! 

இந்த 5 ஆண்டுகளில் ஒரு மிகப்பெரும் சினிமா இண்டஸ்ரிக்கே முதல்வனாகுவதென்பது வெளியில் இருந்து பார்த்தால் வியப்பாக தோன்றும், ஆனால் அதற்க்கு சிவாஜிராவ் கொடுத்த உழைப்பு இருக்கிறதே!!! அது ஆச்சரியப்படும் அளவிற்கு அதிகம். தினமும் 16 மணி நேர வேலை, 2 மணி நேரம்தான் தூக்கம்; வருடத்திற்கு குறைந்தது நான்கு மொழிகளிலும் 15 படங்கள்; இத்தனைக்கும் அவன் ஷூட்டிங்கிற்கு நேரம் தவறியதில்லை!!! முன்னுக்கு வரவேண்டும் என்கின்ற வெறி, அவனுள் இருந்த சினிமா மீதான மோகம், தொழில் மீதிருந்த பக்தி; இவைதான் ஐந்தே ஆண்டுகளில் வெறும் சிவாஜிராவை 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தாக மாற்றியது........ 





Post Comment

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

No comments:

Post a Comment

தங்களது கருத்துகளை தெரிவியுங்கள்...